மேற்கு வங்காளப் பட்டியலில் 1.04 கோடி போலி வாக்காளர்கள்

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் கழித்துக் கட்டப்பட்டுள்ளனர். உயிரிழப்பு, நிரந்தரமாக புலம்பெயர்வு, வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குரிமை போன்றவற்றின் அடிப்படையில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் இண்டி கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை மையப்
படுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க மேற்கு வங்காள நிலவரத்தை உன்னிப்பாக கவனிப்போம். மேற்கு வங்காளத்தில் சுமார் 1.04 கோடி வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் நடத்திய ஆய்வின் வாயிலாக இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வங்க தேசத்திலிருந்து மேற்கு வங்காளத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவது குறைந்தபாடில்லை. இன்னும் சொல்லப் போனால் மமதா அரசே இதை ஊக்குவித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 2,688 வங்காள தேச பிரஜைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உண்மையில் இந்த புள்ளி விவரம் குறைவானதுதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாக்கு வங்கி அரசியலுக்காக மமதா பானர்ஜி அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறார். மேற்கு வங்காளத்தில் இதற்கு முன் 2002ல் தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேற்கு வங்காளத்தில் 7.61 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அங்கு 6.57 புள்ளி கோடி வாக்காளர்களே உள்ளனர். 1 கோடிக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்களை களை எடுக்க வேண்டும்.

மொத்த வாக்காளர்களில் ஏறத்தாழ 13.69 சதவீதத்தினர் போலி வாக்காளர்கள் ஆவர். சுருக்கமாகச் சொன்னால், 8ல் ஒருவர் போலி வாக்காளர் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் டாக்டர் மிலன் குமார் (ஐ.ஐ.எம். விசாகப்பட்டினம்), டாக்டர் விது சேகர் (எஸ்.பி. ஜெயின் மேலாண்மை நிறுவனம்) ஆகியோர் நவீன அலசல் முறையை கையாண்டு மேற்கு வங்காளத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் உள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் மமதா பானர்ஜி மூர்க்கத்தனத்தையும், மூடத்தனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். மேற்கு வங்காளத்தில் ரோஹிங்கியாக்கள் உட்பட லட்சக்கணக்கான ஊடுருவல்காரர்கள் சுதந்திரமாக நடமாடி வருகிறார்கள். இவர்களையெல்லாம் களையெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வற்புறுத்தி வருகிறது. இதை ஏற்க முடியாது என மமதா பகிரங்கமாக அறிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்துக்கே அவர் சவால் விட்டுள்ளார்.

‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் தேர்தல் ஆணையம் பணியை கையில் எடுத்துக் கொள்ளும். அதுவரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் அதிகாரிகள் செயல்பட வேண்டும். அதன் பிறகும் கூட மாநில அரசுக்கு எதிராக அதிகாரிகள் செயல்படக் கூடாது. எனது பேச்சை அதிகாரிகள் மீறக்கூடாது. எவரையும் துன்புறுத்தக் கூடாது. குஜராத்தில் உள்ளவர்கள் பிறப்பிக்கின்ற உத்தரவுக்கு மேற்கு வங்காள அதிகாரிகள் அடிபணிய வேண்டியதில்லை’ என்று பிர்பும் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

மமதா பானர்ஜி தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று வருகிறார். வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு செய்தே அரசியல் ஆதாயத்தை அவர் அறுவடை செய்து வருகிறார். மேற்கு வங்காள வாக்காளர் பட்டியல் செம்மையான முறையில் தீவிர திருத்தத்துக்கு உட்படுத்த வேண்டும். இதை சாத்தியப்படுத்தினால் மட்டுமே பாரபட்சமற்ற, நேர்மையான தேர்தலை மேற்கு வங்காளத்தில் நடத்த முடியும். இல்லாவிட்டால் தேர்தலை நடத்துவதை வெறும் கேலிக்கூத்தாகவே முடிந்து விடும் என்று ஜனநாயக ஆர்வலர்கள் தெரிவித்துள்ள கருத்து புறந்தள்ளதக்கதல்ல.

பீகார் வாக்காளர் பட்டியலைப் பற்றி கூச்சல் எழுப்பும் பல்வேறு கட்சிகளும் மேற்கு வங்காளப் பட்டியலைப் பற்றி வாய் திறக்காதது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் பதில் கிடைக்கும் என்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவில்லை.

கட்டுரையாளர்: செய்தியாளர், ஆர்கனைசர் ஆங்கில வார இதழ்

ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி